உழைப்பின் மொழியில் பட்டதாரிஎழுத்து வளம் உண்டா?

இலக்கியம் தெரியுமா?

ஆங்கிலத்தில் அடுக்கடுக்காய் அழகழகாய்ப் பேசத்தெரியுமா?


ஆனால்,

நெஞ்சுரம், நேர்மை, Integrity என்ற வார்த்தைகளெல்லாம் அவற்றின் வலிமை, அழகு என்னவென்று அவரது நடத்தையை விவரித்து உணர்ந்து கொண்டன. அந்தப் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள் இது.

ஆறாம் வகுப்பு தான் படித்தார். அதற்கு மேல் படிக்க வசதியில்லை.

ஆனால் அவராகப் படிக்கக் தடையேதும் இல்லை.

உலகம் படித்தார். அனைத்து மக்களையும் உறவாகக் கொண்டார்.

கருப்புக் காந்தி என்று மக்கள் அழைக்கும் படி அமைந்தது அவர் செயல்கள். பாரதியார் பாடல்களையும் தான் அறிந்த சுதந்திரப் போராட்டச் செய்திகளையும் மக்களுக்கு எடுத்துச் சென்றிடுவார், காலை 6 மணி முதல். அயராமல் இரவு 10, 11 மணி வரை பசி, களைப்பு பார்க்காத உழைப்பு… சிறை செல்லத் தயங்கவில்லை. திருமண மகிழ்ச்சி தேடவில்லை. ஒரு மனமாய் மக்கள் உயர உழைத்தார்.

சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டில், குலத் தொழில் கல்வி , அதாவது, நெசவாளியின் மகனோ மகளோ, நெசவைப் பற்றி மட்டும் படிக்க முடியும், விவசாயியின் குழந்தை விவசாயம் மட்டுமே படிக்க முடியும் என்ற பெயரில் மீண்டும் இளங்குழந்தைகளின் சுதந்திரம் பறி போக இருந்ததைத் தடுத்தவர் அவர். தொழில் பெருகவும், மழை நீரும் ஆற்று நீரும் வீணாய்ப் போவதைத் தடுத்து விவசாயம் செழிக்கத், தமிழகம் முழுதும் அணைகள் அமைக்கவும் வழி வகுத்தவர் அவர்.

‘காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா என் தோழா, பசையற்று போனோமடா’ என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் சித்தரித்த ஏழை மனிதர்களின் துயரக் குழந்தைகள் ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற உறுதி கிடைத்தாலாவது படிப்பார்கள் என்று, மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த, எளிய சிந்தனையாளர்.

மூத்த தலைமுறை தமது பதவியை இளைய தலைமுறைக்குத் தந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்று முன்னுதாரணமாகச் செயல்பட்டவர் அவர்.

King Maker என்று இந்தியா அழைத்த இந்தி தெரியாத உழைப்பாளி, உழைப்பின் மொழியை விட எம்மொழி தேவை, உரையாட?


காம்ராஜ் சுந்தரம்,

15 ஜூலை 2020.

6 views0 comments