பெயரில் என்ன இருக்கிறது?அன்புக்குரிய பெற்றோர்கள், குணத்தால் பெரியவர்கள், நமக்குப் பெயர் வைக்கிறார்கள். உடலோடு சேர்ந்து நாமும் வளர்கிறோம், விருப்பு வெறுப்புகளின் விளைவால், சில நேரங்களில் நல்லதாக, மற்றசில நேரங்களில், இயற்கைக்கே இடைஞ்சலாக.


மேலும், நமது தன்னிலை உணர்வு, மற்றும் விழிப்புணர்வு வளர, உண்மையில் வளர்ச்சி என்ன என்பதை உணர்கிறோம். இந்த உணர்வு வளர, உண்மையும் நேர்மையும் மிகுந்த உலகம் அறிந்த வாழ்க்கைகள் - கிருஷ்ணர், மார்டின் லூதர் கிங், யேசு கிறிஸ்து, முகமது நபி, ஆபிரஹாம் லிங்கன் மற்றும் பற்பலர் ஒளியூட்டுகிறார்கள். நமது சுற்றமென்னும் உலகம் மட்டும் அறிந்த அம்மா, அப்பா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, நண்பர்கள் - அவர்களும் நம் தன்மை உயர அவர்கள் வாழும் விதத்தால் விளக்கேற்றுகிறார்கள்.


விருப்பத்தாலும், தன்னிலை உணர்வின் வளர்ச்சியாலும், எனக்கே பொருத்தமான, பிடித்த, பெயர் ஒன்றைத் தேர்ந்து, உள்ள பெயரை மாற்ற முடிவு செய்தேன். தேர்ந்த பெயர், "Citizen K. சிட்டிசன் கே."


*******


பல வருடங்களுக்கு முன்னால், நான் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த போது, அமெரிக்கர்களின் நேரான நாவிற்குக் காமராஜ் கல்யாணசுந்தரம் என்று சுழன்று சுழன்று ஒலிக்கும் பெயர் கொடுத்து, அறிமுகம் செய்து, அவர்கள் வாய்வலிக்கும் பாவம் தவிர்ப்போம் என்று எண்ணி, ‘நான் ராஜ்,’ என்று அறிமுகம் செய்து கொண்டேன். பெருந்தலைவர் காமராஜரின் நினைவில் எனக்குப் பெயர் வைத்தது மட்டும் அல்லாமல், அதைச் சொல்லி சொல்லி வேறு, என் தாத்தா என்னை ‘இந்தப் பெயருக்கு ஏற்றாற் போல் வாழ முடியுமா?,’ என்ற மலைப்பை உண்டாக்கிவிட்டார். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ‘ராஜ்,’ ஒரு நல்ல வாய்ப்பு. சரி, இனிமேல் நாம், ‘ராஜ்,’ மட்டும் தான்!


ஆனால் அவர்கள் அந்தப் பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிடும்போதெல்லாம், இரண்டாவது தடவையில் தான் ‘ஓ! என்னைத் தான் அழைக்கிறார்கள்,’ என்ற உணர்வு வரும். வேறு யாரையோ அழைக்கிறார்கள் என்ற நினைவு தான் அழுந்தப் பதிந்தது.


2016 - இல் நான் மிகவும் மதிக்கும் அன்பு நண்பர் பேட்ரிக் மலோனி, என்னை "Citizen K - சிட்டிசன் கே," என்று அழைக்க ஆரம்பித்தார். வருவாய் பார்க்கப் பல நாடுகளில் வேலை செய்து வசித்த நான், அன்னாடுகளில் உள்ள மனிதர்களின் அபிமானத்தையும் தனித்துவத்தையும் பற்றி அவரிடம் உற்சாகமாகப பகிர்ந்த போது, அவர் எனக்குக் கொடுத்த அன்புப் பெயர் இது.


2019 - இல் நாராயணசாமி என்னும் முகனூல் அன்பர், அறிமுகம் ஆனது மட்டும் அல்லாமல், என் முயற்சிகளுக்கு வாழ்த்து வழங்கியது மட்டும் அல்லாமல், இருபெருந்தலைவர்களின் அரும் பெயர் கொண்டவன் நான் என்று சொல்லி என்னை மேலும் மலைக்க வைத்துவிட்டார்.


ஏற்கனவே காமராஜர். இன்னொருவரா?


ஆமாம். அவர் தான் மக்கள் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.


சரியாப் போச்சு. "Citizen K - சிட்டிசன் கே," தான் சரி. இரண்டு பெரும் பொறுப்பு இயலாது சாமி என்று நானிருக்க, அன்புச் சகோதரி அம்மு அஷோக்குமார், எனக்குப் பெயரின் மகத்துவத்தையும், எண் கணிதத்தின் உதவியையும் விளக்கி, ‘Kamraj Sundram - காம்ராஜ் சுந்தரம்,’ என்ற கலைப் பெயர் அழகாகவும் பொருத்தமாகவும் உள்ளது என்று உதவிக்கு வந்தார். சகோதரி அம்மு அஷோக்குமார், எண்கணிதத்தில் ஒரு ‘Expert,’ - திறனாளி, என்பது அவர்கள் எனக்கு, விளக்கம் அளிக்கும்போதே புரிந்தது.


எனக்கு அப்பெயர் மிகவும் பிடித்தது. என்மேல் அக்கறை கொண்ட ஒரு உடன்பிறவாச் சகோதரி வழி வரும் பெயர் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம். என் புதிய பாதையின் துவக்க அடையாளக் கல்லாகவும், என் உயிராய் உணர்வாய்க் கலந்த இரு மாமனிதர்களின் பெயர்ச்சுவடுகளையும் கொண்ட பெயர் என்பதாலும் வந்த ஆனந்தம், இன்னொரு பக்கம்.


இயற்கையும் எனது சக்தியும் ஒத்துழைத்தால், "Citizen K - சிட்டிசன் கே," என்ற தலைப்பில் உறுதியாய் ஒரு புத்தகம் எழுதுவேன் என்ற தெளிவும் பிறந்தது. ஒரு எளிய கிராமத்திலிருந்து, பல கலாச்சாரங்களையும், பல தேசங்களையும் பார்த்த ஒரு சிறுவனின், மனிதனின், அவன் உறவுற்ற மனிதத்தின் கதையாக அமையும் இது. என் அனுபவங்களும் இதை எழுத உதவும் என்று எண்ணுகிறேன்.


அன்புச் சகோதரர் பேட்ரிக் மலோனி அவர்களுக்கும், அன்புச்சகோதரி அம்மு அஷோக்குமார் அவர்களுக்கும், என் எழுத்திற்கு ஒரு தலைப்பும், என் அடையாளத்திற்கு இன்னொரு தலைப்பும் கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி.


நான் என் புதுமையில் பழமையானவன். என் பழமையில் புதிதானவன்.


அன்பு நண்பர்களுக்கும் வாசிக்கும் அன்பர்களுக்கும்,

அன்புடன் காம்ராஜ் சுந்தரம் எனும்

காமராஜ் கல்யாணசுந்தரம்

ஜூலை 13, 2020


26 views0 comments